×

ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலையில் கொரோனாவால் 8 ஆயிரம் ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு ரூ.20 கோடி வருமானம் பாதிப்பு

* திருவிழாக்கள் தடையால் வறுமை
* அரசின் நிதி உதவிக்கு கோரிக்கை

திருவண்ணாமலை: ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலையில் கொரோனாவால் 8 ஆயிரம் ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு ₹20 கோடி வரை வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. திருவிழாக்கள் தடையால் வறுமையில் வாடிவரும் நிலையில் அரசின் நிதி உதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக நாடுமுழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் வரும் 31ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் நாடுமுழுவதும் அமல்படுத்திய ஊரடங்கினால், சாலையோர கடைகள் தொடங்கி, சொகுசான ஷாப்பிங் மால்கள் வரையில் விற்பனை பாதிக்கப்பட்டது.

மேலும் பெட்டிக்கடைகள், டீ கடைகள், ஓட்டல்கள், முடித்திருத்தும் தொழில் உட்பட அனைத்துவிதமான தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் கோயில் திருவிழாக்கள், திருமணங்கள், அரசியல் பொதுக்கூட்டங்கள், விவாத ேமடைகள் என்று அனைத்து சுபநிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த முதலில் தேடுவது, ஒலி, ஒளி அமைப்பாளர்களைத்தான். கொரோனாவால் திருமணம், கோயில் திருவிழா, அரசியல் பொதுக்கூட்டங்கள் என்று எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படாததால், ஒலி, ஒளி அமைப்பாளர்கள் வேலைவாய்ப்புகளின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒலி, ஒளி அமைப்பாளர்கள் பெரிதும் நம்பியிருப்பது, கோயில் திருவிழாக்களைத்தான் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் குடியாத்தம் கெங்கையம்மன், வேலங்காடு திருவிழா போன்ற பெரிய திருவிழாக்கள் தொடங்கி ஒவ்வொரு கிராமங்களிலும் நடைபெறும் திருவிழாக்கள் நடத்தப்படவில்லை.

அதோடு வேலூர்மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற புஷ்பபல்லக்கு திருவிழாவும் இந்தாண்டு நடத்தப்படவில்லை. இதனால் ஒலி, ஒளி அமைப்பாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒலி, ஒளி அமைப்பாளர்கள், அவர்களிடம் பணிபுரிபவர்கள் என்று மொத்தம் 5ஆயிரம் பேர் வரையில் உள்ளனர். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒலி, ஒளி அமைப்பாளர்கள், அவர்களிடம் பணிபுரியும் கூலித்தொழிலாளர்கள் என்று மொத்தம் 3 ஆயிரம் பேர் உள்ளனர். 4 மாவட்டங்களிலும் 8ஆயிரம் பேர் வரையில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கொரோனாவால் கடந்த 2 மாதங்களாக ஒலி, ஒளி அமைக்க ஆர்டர்கள் கிடைக்காமல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 20 கோடி வரையில் வருமானம் பாதிக்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அவர்களது குடும்பத்தினரும் அத்தியாவசிய தேவைக்கு அடுத்தவர்களை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு வறுமையில் வாடும் ஒலி, ஒளி அமைப்பாளர்களை கண்டறிந்து உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

* ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒலி, ஒளி அமைப்பாளர்கள், அவர்களிடம் பணிபுரிபவர்கள் என்று மொத்தம் 5ஆயிரம் பேர் வரையில் உள்ளனர்.
* கொரோனாவால் திருமணம், கோயில் திருவிழா, அரசியல் பொதுக்கூட்டங்கள் என்று எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படாததால், ஒலி, ஒளி அமைப்பாளர்கள் வேலைவாய்ப்புகளின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Light Organizers ,Vellore ,Thiruvannamalai ,Corona , Earnings ,8 thousand Sound, Light Organizers , Corona in Vellore, Thiruvannamalai
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...